ஜெய்ப்பூர்: சப் கலெக்டரை துப்பாக்கி முனையில் மிரட்டிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராஜஸ்தான் பாஜ எம்எல்ஏ கன்வர்லால் மீனாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தான், அந்தா தொகுதி பாஜ எம்எல்ஏவான கன்வர்லால் மீனா கடந்த 2005ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில், மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரி, அப்போதைய சப் கலெக்டர் ராம் நிவாஸ் மேத்தாவை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இது பற்றி அதிகாரி அளித்த புகாரை தொடர்ந்து கன்வர்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2020ல் அக்லேரா கூடுதல் மாவட்ட நீதிபதி கன்வர்லாலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கன்வர்லால் வழக்கு தொடர்ந்தார். இந்த ஆண்டு மே 2 அன்று அவரது மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அவர் அணுகினார். இருப்பினும், உச்ச நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து இரண்டு வாரங்களுக்குள் சரணடைய உத்தரவிட்டது.
இதனையடுத்து மே 21ம் தேதி அக்லேரா நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். குற்றவியல் வழக்கில் கன்வர்லால் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து மாநில அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துகளை சட்ட பேரவை சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானி கேட்டிருந்தார். இந்த நிலையில் பேரவையில் இருந்து கன்வர்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ராஜஸ்தான் சட்ட பேரவை செயலகம் நேற்று தெரிவித்தது.