கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதிகளை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதிகளை வடகிழக்கு மண்டல வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர கொண்டு வரவேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் சுகந்தா மஜூம்தார் கோரிக்கை விடுத்தார். கூச்பிகார் எம்பி ஆனந்தா மகாராஜூம் இதே போன்று கோரிக்கை விடுத்தார். பல பாஜ தலைவர்களும் வடக்கு வங்காளத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக பாஜ தலைவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில், மேற்கு வங்கத்தை பிரிப்பதற்கு எதிராக பேரவையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில்,‘‘ கூட்டாட்சியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.மேற்கு வங்கத்தை பிரிக்கும் முயற்சியை நாங்கள் எதிர்க்கிறோம்.நாட்டின் சுதந்திரத்தில் வங்க மக்களின் போராட்டம் முக்கியமானது.எனவே அனைவரும் இணைந்து மாநில வளர்ச்சிக்கு பாடுபடுவோம்’’ என்றார். எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி,‘‘மேற்கு வங்கத்தை பிரிப்பதற்கு நாங்கள் எதிர்க்கிறோம். ஒன்றுபட்ட மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரும்புகிறோம் என்ற வரியை சேர்த்தால் தீர்மானத்தை தங்கள் கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார். அவருடைய முன்மொழிவை மம்தா ஏற்று கொண்டதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.