சென்னை: சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம சுப்பிரமணியன். இவர் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் வெங்கடாசலம் (எ) வெங்கடேஷ். எம்பிஏ பட்டதாரி. இவருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வந்துள்ளார். அதன்படி தனது வீட்டின் அருகே வசிக்கும் பாஜ பிரமுகர் லதா என்பவரிடம் ராமசுப்பிரமணியன் தனது மகனின் வேலைக்கு சொல்லி வைத்திருந்தார். அதன்படி, லதா கடந்த 2023ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணி காலியாக இருப்பதாகவும், அந்த பணிக்கு உங்கள் மகனை சேர்க்கலாம். அதற்காக நீங்கள் சிந்தாதிரிப்பேட்டையில் பாஜ பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவரை சந்தித்து பேசுங்கள் என்று அவரிடம் கூறியுள்ளார். அவர் பாஜ பிரமுகரான ஜெயச்சந்திரனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரூ.26 லட்சம் கொடுத்தால் மாநகராட்சியின் துப்புரவு ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார்.
பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு தனது மகன் வெங்கடேஷூடன் ராமசுப்பிரமணியன் கடந்த 2023ம் ஆண்டு பாஜ பிரமுகர் ஜெயச்சந்திரனை சந்திக்க ரிப்பன் மாளிகைக்கு வந்துள்ளார். ஜெயச்சந்திரன் மாநகராட்சி அதிகாரி என ஜோஷிதா என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிறகு அரசு முத்திரையிடப்பட்ட கவரில் மாநகராட்சியின் துப்புரவு ஆய்வாளர் பணிக்கான பணி நியமன ஆணையை இருவரும் ராமசுப்பிரமணியிடம் வழங்கி உள்ளர். இதை பிரித்து பார்த்த போது, மாநகராட்சி ஆணையரின் கையெழுத்து போடப்பட்ட பணி நியமன ஆணை இருந்தது. பிறகு சொன்னபடி ரூ.26 லட்சத்தை பாஜ பிரமுகர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜோஷிதாவிடம் வழங்கினர். மேலும், வெங்கடேஷூக்கு தேனாம்பேட்டை மண்டலத்தில் துப்புரவு ஆய்வாளராகவும், மாதம் ரூ40 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்றும் பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு இல்லாமல் ஜோஷிதா தினமும் மயிலாப்பூர், மந்தைவெளி பகுதியில் குப்பை சரியாக அள்ளப்பட்டுள்ளதா என்று தினமும் போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் தனக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி ஜோஷிதாவுக்கு தினமும் வெங்கடேஷ் போட்டோ எடுத்து அனுப்பி வந்துள்ளார். அதன்படி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் ஜோஷிதா மூலம் ரொக்கமாக பணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.14 லட்சம் மதிப்புள்ள காசோலையை வெங்கடேஷிடம் ஜோஷிதா கொடுத்து, இதை மாநகராட்சி கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி கொடுத்துள்ளார். அந்த காசோலையை வெங்கடேஷ் தவறவிட்டு விட்டார். இதுகுறித்து ஜோஷிதாவிடம் வெங்கடேஷ் கூறியுள்ளார். ஆனால், இது சென்னை மாநகராட்சி பணம். அதை கட்டாயம் கட்ட வேண்டும். இல்லை என்றால் வேலையில் இருந்து நீக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் தற்போது தன்னிடம் ரூ.4 லட்சம் இருப்பதாகவும் அதை கொண்டு வந்து தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி ஜோஷிதா மற்றும் பாஜ பிரமுகர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் பெரியமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வரழைத்தனர். அங்கு மாநகராட்சி வளாகத்தில் ஆட்டோவில் அமர்ந்தபடி வெங்கடேஷ் மற்றும் அவரது தந்தை ராமசுப்பிரமணியனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளர். மேலும், வெங்கடேஜூக்கு உதவி ஆணையர் பணி உயர்வு வழங்குவதாகவும் அதற்கு மேலும் ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ராமசுப்பிரமணியன் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் ஜோஷிதா மற்றும் ஜெயச்சந்திரன் ஆகியோர் கொடுத்த உதவி ஆணையருக்கான பணி நியமன ஆணையை மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளிடம் காட்டிய போது, அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. மேலும், பணி நியமன ஆணையை வழங்கிய ஜோஷிதா மாநகராட்சியில் வேலை செய்யவில்லை என்றும் தெரிந்தது. வெங்கடேஷ் கொடுத்த பணத்தில் இருந்தே அவருக்கு ஊதியமாக கொடுத்து ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
அதைதொடர்ந்து சம்பவம் குறித்து ராமசுப்பிரமணியன் ெபரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், பாஜ பிரமுகரான ஜெயச்சந்திரன் தனது தோழியான ஜோஷிதாவுடன் சேர்ந்து ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் ரேவதி என்பவர் மூலம் போலியான பணி நியமன ஆணைகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் போன்று போலியான கையெழுத்து, மாநகராட்சி முத்திரை தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுபோல, கடந்த 3 ஆண்டுகளில் 23 பேரிடம் ரூ.1.35 கோடி பணம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகள் வழங்கி ேமாசடி செய்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 29 கிராம் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக ஆட்களை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் லதா மற்றும் கவுரி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ேநற்று முன்தினம் அதிரடியாக சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜ பிரமுகர் ஜெயச்சந்திரன் (42), அவரது தோழி ஜோஷிதா (28), ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ரேவதி (45) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஆட்களை பிடித்து கொடுத்து தலைமறைவாக உள்ள பாஜ பிரமுகர்களான லதா மற்றும் கவுரியை போலீசார் தேடி வருகின்றனர்.