சென்னை: பாஜ தலைவர் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணாசாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் இருக்கும் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. கல்வி தொடர்புடையது. மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கித் தரமுடியவில்லை. அதனை அண்ணாமலை திசை திருப்ப பார்க்கிறார். ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை வாங்கி தருவதற்கு துப்பு இல்லை. சவால் விடுகிறார். அண்ணாமலையின் தரம் அவ்வளவு தான். பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
மோடி 2018ல் தமிழகம் வரும் போது திருட்டு தனமாக வந்து விட்டு, சுவர் கீவர் எல்லாம் உடைத்து கொண்டு போனார். மக்களை சந்திக்க பயந்து விட்டு. எங்கே பார்த்தாலும் கறுப்பு கொடி காட்டிக் கொண்டு இருந்தார்கள். பலூன் எல்லாம் பறக்க விட்டார்கள். அது எல்லாம் ஞாபகம் இருக்கும். பிரச்னையை திசைதிருப்ப வேண்டாம். போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? வரச் சொல்லுங்க. வீட்டில்தான் நான் இருப்பேன். அறிவாலயம் பக்கம் ஏதோ பண்ணுவேன் என்று அண்ணாமலை சொன்னார். அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்க தைரியம் இருந்தால். பாஜ தலைவரின் பெயர் கூட சொல்றது கிடையாது. தவிர்த்து விடுவேன். அந்த பிரச்னை கிடையாது. தமிழ்நாட்டின் நிதி உரிமையை கேட்டு வாங்கனும். அதுக்கு உபயோகமாக பண்ண முடிந்தால் பண்ண சொல்லுங்கள்.
தனியார் பள்ளிகளை சட்டவிரோதமாகவா நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி அதை நடத்தி கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளியையும் அரசு பள்ளியையும் ஒப்பிடாதீர்கள். தனியார் பள்ளியில் காலை உணவு கொடுக்கிறார்களா?. யூனிபார்ம் இலவசமாக கொடுக்கிறார்களா?. எனவே தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடாதீர்கள். தமிழக விளையாட்டு வீரர்கள் வாராணசி சென்றுவிட்டு, ரயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் சென்னை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவில் கூட்டத்தை சமாளிக்கத் தெரியாமல் உத்தரப்பிரதேச பாஜ அரசும், மத்திய அரசும் திணறி வருகின்றன. எத்தனை பேர் நெரிசலில் பலியானார்கள், காயமடைந்தார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை பகிராமல் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.