புதுக்கோட்டை: பாஜ கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு எதிரொலியாக தேர்தலை நேரடியாக சந்திக்க அண்ணாமலை அச்சம் அடைந்துள்ளார். இதனால், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று அவரே தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6ம் நாள் பாத யாத்திரை, நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதிக்கு வந்தது. திருமயத்திற்கு காலை 9 மணிக்கு யாத்திரை வருவதாக இருந்தது. இதனால் கட்சி நிர்வாகிகள், கிராமப்புற பெண்களை 8 மணிக்கே வேன்களில் அழைத்து வந்து காக்க வைத்தனர்.
பெண்களுக்கு யூனிபார்ம் சேலை வழங்கப்பட்டிருந்தது. வழக்கம் போல ஒன்றரை மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்கு அண்ணாமலை வந்தார். திருமயத்திற்கு வருவதற்கு முன் காரைக்குடியில் உள்ள சொகுசு ஓட்டலில் அண்ணாமலை தங்கி இருந்தார். அங்கிருந்து சொகுசு காரில் திருமயம் வந்தார். அங்கு கடியாபட்டி விலக்கு ரோட்டில் இருந்து திருமயம் கோட்டை வழியாக திருமயம் பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றார். அங்கு பிரசார வாகனத்தில் இருந்தவாறு 20 நிமிடம் பேசினார். பின்னர் அங்கிருந்து காரில் கடியாப்பட்டியில் உள்ள சொகுசு ஓட்டலுக்கு சென்று மதிய உணவு அருந்தி ஓய்வெடுத்தார்.
விராச்சிலை கிராமத்தில் உள்ள பாஜ நிர்வாகி வீட்டில் அண்ணாமலைக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெயில் கடுமையாக இருந்ததால் அங்கு செல்வதை புறக்கணித்து விட்டு சொகுசு ஓட்டலுக்கு சென்றார். திருமயம் தொகுதி சிவகங்கை, மதுரை மாவட்ட எல்லையில் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. ஆனால் அண்ணாமலை திருமயம் வேங்கை கண்மாய் கரையில் இறங்கி 2 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடந்தார். பின்னர் அண்ணாமலை அளித்த பேட்டியில், ‘கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை நடுநிலையாக நடத்த வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை’ என்றார்.
கரூர் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு படுதோல்வி அடைந்ததில் இருந்தே அண்ணாமலைக்கு சரிவுதான். சமீபத்தில் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டது பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி ஆட்சியே பறிபோனதுதான் மிச்சம். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பாஜ கட்சிக்குள்ளும் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கட்சியில் உள்ள மகளிர் அணியினர் பற்றியும், நிர்வாகிகள் பற்றியும் வெளியாகும் வீடியோக்களால் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அவர் போகிற இடங்களில் எல்லாம் கூட்டத்தை அழைத்து வரும்படி நிர்பந்திப்பது நிர்வாகிகளிடம் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. கூட்டணி பிரச்னையில் அதிமுக தலைவர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பலை உள்ளது. இந்த காரணங்களால் தேர்தலை சந்தித்தால் தோல்வி அடைவது உறுதி என்ற அச்சத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அண்ணாமலை கூறியிருப்பதாக அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
* ஓபிஎஸ் மிகப் பெரிய தலைவர் அண்ணாமலை திடீர் புகழாரம்
அண்ணாமலை பேட்டியின் போது, ‘அதிமுகவில் யாரையும் நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை யாரை அங்கீகரிக்க வேண்டும், யாரை கூப்பிட வேண்டும் என்று மேலிடம் முடிவு செய்கிறது. ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் விரக்தியில் இல்லை. ஓபிஎஸ் மிகப் பெரிய தலைவர். தமிழ்நாட்டு மக்களுக்காக அரும்பாடுபட்டவர். முதலமைச்சராக இருந்தவர். வேறு, வேறு பொறுப்புகளில் மக்கள் பணி செய்தவர். எங்களைப் பொறுத்தவரை அதிமுகவில் நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. இவர்கள் தவறானவர்கள் என்று சொல்லவில்லை. அதிமுகவோடு அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் பாஜ உள்ளது’ என்றார்.