சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் 100 அடி உயர கொடி கம்பம் வைக்கப்பட்ட பிரச்சனையில் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்தாண்டு சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியானது நடத்தப்பட்டது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவின் போது முதலமைச்சர் புகைப்படத்தினை அகற்றி பிரதமர் படத்தை ஒட்டியதாக அமர் பிரசாத் ரெட்டி மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மற்றொரு புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகாரின் கீழ் தற்போது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் காவல் நீட்டிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொடி கம்பம் அகற்றும் பிரச்சனையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு வாகனத்தை சேதப்படுத்தியது, வன்முறையை தூண்டும் வகையில் பெருமளவு ஆட்களை சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடர்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டிருப்பதால் விடுதலையாவதற்கு இரண்டு வழக்குகளிலும் ஜாமின் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி நாளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.