பெரம்பூர்: சென்னையில் நடைபெற்ற பாஜ பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய பாஜ மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாஜக சார்பில், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய துணைத் தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசினார்.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் உள்ளிட்ட பலரும் பேசினர். அப்போது கபிலன் பேசும்போது, ‘’தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களையும் அருவருப்பான கருத்துக்களையும் தெரிவித்தார். இதுகுறித்து எஸ்ஐ ஜெகதீசன் கொடுத்த புகாரின்படி, பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வியாசர்பாடி வியாசர்நகர் 7வது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை கபிலனை கைது செய்தனர். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.