மதுரை: டெல்லியில் விளையாடியதை போல தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாஜ விளையாட முடியாது என திருமாவளவன் எம்பி கூறினார். மதுரையில் நேற்று விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. பாஜ – அதிமுக கூட்டணி ஆட்சி என அமித்ஷா மட்டும் தான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார். இதுவரை எடப்பாடி பழனிசாமி, கூட்டணி ஆட்சி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதிமுகவுக்கு கூட்டணி ஆட்சியில் உடன்பாடு உண்டா, இல்லையா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எல்லா மாநிலங்களிலும் பாஜ மத அரசியலை செய்து வன்முறைக்கு வித்திடுகின்றனர். ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பகைமையை வளர்க்கின்றனர்.
ஆனால், திமுகவினர் மீது அமித்ஷா பழி போடுவது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. திருப்பரங்குன்றம் மக்கள் ஒருவருக்கொருவர் பகை இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடையே தீயை அமித்ஷா மீண்டும் பற்ற வைக்க பார்க்கிறார். ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள். அது அமித்ஷாவின் கனவாக இருக்கலாம். டெல்லியில் விளையாடியதை போல தமிழ்நாட்டில் விளையாட முடியாது. வட இந்தியா வேறு, தென் இந்தியா வேறு. தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்ட பூமி. சமூக நீதிக்கான மண். தமிழ்நாட்டையும் டெல்லியை போல் ஆக்கிவிடலாம் என முயற்சித்து பார்க்கிறார்.
வடக்கே போனால் ராமர், கிருஷ்ணர் மற்றும் விநாயகர், மேற்கே போனால் துர்கா, தமிழ்நாட்டுக்கு வந்தால் முருகனை தூக்கி பிடிக்கிறார்கள். எல்லா கட்சியிலும் முருக பக்தர்கள் உள்ளனர். முருக பக்தர்கள் என்று சொன்னவுடன் ஏமாந்து பின்னால் வந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். 2026 தேர்தல் முடிவுகள் அதை உணர்த்தும். ஒடிசா சென்றால் ஒரு தமிழனையா முதலமைச்சராக்க போகிறீர்கள் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு வந்தால் முருகனை தூக்கி பிடிக்கிறார்கள். இது எல்லாம் நாடக அரசியல். நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.