Tuesday, April 23, 2024
Home » பாஜ கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்த நிலையில் தமாகா இளைஞரணி தலைவர் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு: கட்சி இரண்டாக பிளவா? பரபரப்பு தகவல்கள்

பாஜ கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்த நிலையில் தமாகா இளைஞரணி தலைவர் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு: கட்சி இரண்டாக பிளவா? பரபரப்பு தகவல்கள்

by Karthik Yash

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு கட்சியுடன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜ கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக, தங்களது தலைமையில் புதிய கூட்டணியை அமைப்பதற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதேபோல், பாஜ தலைமையிலும் பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதையொட்டி, கூட்டணி கட்சி தலைவர்களை கலந்து கொள்ள வைக்க வேண்டிய நிர்பந்தம் பாஜவுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், அதிமுகவுடன் நெருக்கமாக இருந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று திடீரென பாஜ கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் தமாகா இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா, நேற்று திடீரென சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். காலை 11 மணியளவில் எடப்பாடியை சந்தித்து பேசிய யுவராஜா, பின்னர் புறப்பட்டு சென்றார். தமாகா தலைவர் பாஜவுடன் கூட்டணி என அறிவித்த நிலையில் யுவராஜா, எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாஜ மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், ‘நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ வின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இனி மாநிலக் கட்சிகள் தலைமையில் கூட்டணி இல்லை. இங்குள்ள மாநில கட்சிகள்தான் தேசிய கட்சிகளின் மீது ஏறி சவாரி செய்கின்றன. அங்கு எவ்வளவு சீட்?; இங்கு எவ்வளவு சீட்? என ஒரு சில கட்சிகள் இருபுறமும் கூட்டணி பேரத்தை பேசி வருகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும் அங்கு பேரத்தை முடித்து விட்டு வரட்டும். பிற கட்சிகளை அவர்களின் சின்னங்களில் போட்டியிட வைத்து அங்கீகாரம் பெற்றுத்தரும் இடத்தில் பாஜ இல்லை. அடுத்த கட்சிக்கு அங்கீகாரம் பெற்றுத்தர பாஜ உழைக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில அளிக்கும் வகையில் பேசிய யுவராஜா, ‘2 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சிகளுடனே கூட்டணி’ என்று கூறியிருந்தார். மேலும் கூட்டணி தொடர்பாக தமாகா ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் நிர்வாகிகள் எதிர்ப்பை மீறி பாஜவுடன் கூட்டணி வைக்க தனிப்பட்ட முறையில் ஜி.கே.வாசன் எடுத்த முடிவால் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இதனால் தமாகாவை உடைத்துக்கொண்டு யுவராஜா தலைமையில் நிர்வாகிகள் வெளியேறுவார்களா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் எந்த சூழ்நிலையில் ஜி.கே.வாசன் பாஜ கூட்டணிக்கு சென்றார் என்ற முழு விவரத்தை விளக்கி கூறுவதற்காக யுவராஜா வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பாஜ பக்கம் எடப்பாடி பழனிசாமியை இழுப்பது தொடர்பாக பேசினார்களா? என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* எம்.பி பதவி கொடுத்த அதிமுகவுக்கு ‘கல்தா’
ஜி.கே.வாசனுக்கு எம்பி பதவியை கொடுத்தது அதிமுக. எனவே அவர் அதிமுகவில் தான் சேருவார் என எடப்பாடி பழனிசாமி மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவர் பாஜ கூட்டணியுடன் சேர்ந்தது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* சந்திப்பு ஏன்?
எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது குறித்து தமாகா இளைஞர்அணி தலைவர் யுவராஜா விடுத்துள்ள அறிக்கையில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு முதல் த.மா.கா. அதிமுகவோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்னைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம். அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியலில் பணியாற்றி வந்தோம். தலைவர் ஜி.கே.வாசன், பாஜவுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றியை தெரிவித்துவிட்டு வந்தேன்,’’ எனகூறியுள்ளார்.

* முகத்தை மறைத்து எடப்பாடி வீட்டிற்குள் சென்ற மர்மநபர் யார்?
பாஜ கூட்டணியில் தமாகா இணைந்த நிலையில் தமாகாவின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, நேற்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அவர் சென்ற சிறிதுநேரத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எடப்பாடியை சந்தித்தார். பகல் 12 மணி முதல் மாலை வரை இந்த ஆலோசனை நடந்தது. அப்போது தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ராஜ்சத்யன் வந்தார். அவருடன் காரில் வந்த ஒருவரை முகத்தை மறைத்து எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவர் யார்? என கண்டுபிடிக்க முடியவில்லை. தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என அரசியல் வியூகம் செய்யும் நிபுணராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

15 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi