மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து, அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: மக்களுக்கு நல்லது செய்யும் அரசுக்கும், மக்களை துன்புறுத்தும் அரசுக்கும் வேறுபாடு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பது தான் ஒன்றிய பாஜ அரசின் சாதனையாக உள்ளது. அரசியலுக்காகவும், மக்கள் வரிப்பணத்தை சுரண்டலாம் என்பதற்காக இத்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 25 பேர் பாஜவில் இணைந்தனர். அவர்கள் செய்த ஊழல்களை மறைக்க பாஜ ஒரு வாஷிங் மெஷின் போல செயல்படுகிறது. யாரெல்லாம் மகா ஊழல்வாதிகள் என்று பாஜவினர் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் வாஷிங் மெஷினில் சேர்ந்து விட்டால் அவர்களுடைய வழக்குகள் அனைத்தும் ஆவியாகி விடும்.
நாடு முழுவதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 25 கட்சிகள் இப்போது காணாமல் போய்விட்டது. டெல்லி முதலமைச்சரை சிறையில் அடைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை மூலம் நெருக்கடி கொடுக்கிறார்கள். தேர்தல் பத்திரம் உள்ளிட்ட தகவல்கள் வெளியில் வந்த பிறகு, பணம் பணம் என்பதை மட்டுமே இலக்காக வைத்து 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தியுள்ளனர். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பிணமாகத்தான் இருக்கிறது. இந்த பாஜ கட்சி ஆட்சி அமைந்தால் எதிர்காலம் சுடுகாடு தான். இதெல்லாம் வென்று விடுவோம் என்ற தில்லோடு இருப்பவர்கள் செய்யும் செயலா இது?. பயத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல் இது. இவ்வாறு பேசினார்.