சென்னை: பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் வியூகம் வகுப்பதற்காக கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் இன்று காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்குகிறது. இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டத்திற்கு பிறகு இப்போது அழகிய நகரமான பெங்களூருவில் கூடியிருக்கிறோம். தற்போதைய முக்கியமான தருணத்தில் பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு சமீபத்திய கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவு ஒரு உதாரணம். தேசிய அளவிலும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு பிரதிபலிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக நின்று ஜனநாயகத்தை பாதுகாப்போம். நமது தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வோம் என்றும் முதலமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.