Saturday, April 13, 2024
Home » பாஜவின் எந்த முயற்சியும் வெற்றி பெறாது இமாச்சல் காங். அரசுக்கு இனிமேல் ஆபத்து இல்லை: கட்சி வட்டாரங்கள் தகவல்

பாஜவின் எந்த முயற்சியும் வெற்றி பெறாது இமாச்சல் காங். அரசுக்கு இனிமேல் ஆபத்து இல்லை: கட்சி வட்டாரங்கள் தகவல்

by Ranjith

புதுடெல்லி: ‘இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை. பாஜவின் எந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியும் வெற்றி பெறாது’ என கட்சி மேலிட தலைவர்கள் கூறி உள்ளனர். இமாச்சல் பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் ஆளும் காங்கிரசின் 6 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள்கள் கட்சி மாறி பாஜ வேட்பாளருக்கு வாக்களித்ததால், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 6 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 62 ஆக குறைந்து, காங்கிரசின் பலம் 34 ஆனது. பெரும்பான்மைக்கு 32 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் ஆட்சி தப்பியது. இதற்கிடையே, அதிருப்தி காரணமாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரமாதித்யா சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததும் காங்கிரஸ் அரசுக்கு கடந்த சில நாட்களாக சிக்கலை ஏற்படுத்தி வந்தது. கர்நாடக துணை முதல்வர் தலைமையிலான காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சமரசத்தை ஏற்று விக்ரமாதித்யா தனது ராஜினாமாவை திரும்ப பெற்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சிலர் நேற்று கூறுகையில், ‘‘இமாச்சல் காங்கிரஸ் அரசுக்கு இனிமேல் எந்த ஆபத்தும் இல்லை. 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும். முதல்வர் சுகு மீதும் அவர் இதுவரை செய்த பணிகள் மீதும் கட்சி தலைமைக்கு நம்பிக்கை உள்ளது. எனவே தலைமை பதவி மாற்றம் இப்போதைக்கு சாத்தியமில்லை. அதோடு, விக்ரமாதித்யா சிங் கட்சி மேலிடத்துடன் பேசி வருகிறார்.

கட்சி தாவல் தடை சட்டம் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களும் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்கள். எனவே பணபலத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்கும் பாஜவின் எந்த திட்டமும் இனி வெற்றி பெறாது. இமாச்சல் மக்களும் இத்தகைய அரசியலை விரும்பவில்லை’’ என்றனர்.

* எதுவும் நடக்கலாம்: பாஜ
இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான பாஜவின் ஜெய்ராம் தாக்கூர் கூறுகையில், ‘‘இமாச்சலில் காங்கிரசுக்கு மோசமான அரசியல் சூழல் இருப்பதால் ஆட்சியில் நீடிப்பது கடினம். இதனால் வரும் நாட்களில் எதுவும் நடக்கலாம். எனவே பாஜ தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்’’ என்றார். இது குறித்து செய்தியாளர்கள், ‘காங்கிரஸ் அரசு விரைவில் கவிழும் என பாஜ தலைவர்கள் சொல்கிறார்களே?’ என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவிடம் நேற்று கேட்டதற்கு, ‘‘அதைப் பற்றி அவர்களிடமே போய் கேளுங்கள்’’ என கூறி உள்ளார்.

You may also like

Leave a Comment

16 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi