கடலூர்: விருத்தாசலத்தில் வழக்கறிஞர் மற்றும் அவரது தந்தையை ஏமாற்றி ரூ.1 கோடியே 21 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாலகுமாரன் மகன் பாஸ்கர்(36). வழக்கறிஞர். விருத்தாசலம் வயலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(37). பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான இவர் பெரியவடவாடியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இருவரும் பள்ளி காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ்குமார், விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு இடத்தை பாஸ்கருக்கு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்காக அந்த இடத்துக்கு ரூ.44 லட்சத்தை ராஜ்குமாரிடம் பாஸ்கர் கொடுத்துள்ளார். இதற்கு பிறகு தனது பெட்ரோல் பங்க்கை விரிவுபடுத்துவதற்காக ரூ.30 லட்சம் தேவைப்படுகிறது என்று ராஜ்குமார் கூறியுள்ளார். அவரது தேவைக்காக ரூ.30 லட்சத்தையும் கொடுத்துள்ளார். இதன் பிறகு பாஸ்கர், தான் கொடுத்த பணத்திற்காக அந்த இடத்தை தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தருமாறு கூறியுள்ளார். ஆனால் ராஜ்குமார் அந்த இடத்தை பாஸ்கர் பெயருக்கு பதிவு செய்து தராமல் வேறு ஒருவருக்கு ரூ.65 லட்சத்துக்கு விற்பனை செய்து விட்டார். இதே போல பாஸ்கரின் தந்தையான பாலகுமாரையும் ஏமாற்றி சுமார் ரூ.47 லட்சம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து ராஜ்குமாரிடம் பலமுறை பாஸ்கர் கேட்டபோது, பல்வேறு காரணங்களை கூறி பணத்தை தராமல் ராஜ்குமார் ஏமாற்றி வந்தார். மேலும் பாஸ்கரிடம் பணத்தை தர முடியாது என்று கூறி மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பாஸ்கர், கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில், குற்றப்பிரிவு போலீசார் ராஜ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.