கர்நாடக பாஜ கட்சியின் மாநில தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பொறுப்பேற்றது முதல் பல்வேறு குழப்பங்கள், அதிரடி மாற்றங்கள், அதிருப்திகள், மூத்த தலைவர்கள் விலகல், விமர்சனம் என்று பல கோணங்களில் கட்சி பயணித்து வருகிறது. கர்நாடக பாஜ மாநில தலைவர் பதவிக்கு பல மூத்த உறுப்பினர்கள் போட்டியில் இருந்த போதும் எடியூரப்பாவின் மகன் என்ற ஒரே தகுதியை முன்வைத்து விஜயேந்திரா பொறுப்பேற்றார். இதையடுத்து கர்நாடக பாஜ தந்தை-மகன் கட்சியாகிவிட்டது என்று மூத்த உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
கட்சி பணிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தனர். மேலும் பாஜ குறித்தும், தலைவர்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை பொதுவெளியில் பேசத்தொடங்கினர். கட்சி தலைமை இவர்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்டது. அதை கண்டுகொள்ளாமல் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த பாஜ தலைமை முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த உறுப்பினருமான பசனகவுடா பாட்டீல் யத்னாலை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.
இதன் மூலம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ்-மஜத கூட்டணியை உடைக்க 18 எம்எல்ஏக்கள் கட்சி தாவினர். அதில் எஸ்.டி.சோமசேகர், சிவராம் ஹெப்பார் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். பின்னர் 2023ம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு பழைய கட்சி விசுவாசத்தில் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமாருடன் அதிக நெருக்கம் காட்டினர்.
இதனால் பாஜ தலைவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது. மேலும் பாஜ அறிவிக்கும் போராட்டங்களிலும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்காமல் தவிர்த்தனர். இன்னும் ஒருபடி மேலே சென்று பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டாலும் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிட்டனர். இதையடுத்து எஸ்.டி.சோமசேகர், சிவராம் ஹெப்பார் இருவரும் பாஜவில் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் திட்டவட்டமாக அறிவித்தார்.
இவர்களது கட்சி விரோத நடவடிக்கை குறித்து பாஜ தலைமை கண்காணித்து நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. ஆனால் அந்த நோட்டீசுக்கு இவர்கள் அளித்த பதிலில் தலைமை திருப்தி அடையவில்லை. இதையடுத்து எம்எல்ஏக்கள் எஸ்.டி.சோமசேகர், சிவராம் ஹெப்பார் இருவரையும் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்த முடிவை வரவேற்பதாக இருவரும் அறிவித்துள்ளனர். இதுவரை பாஜவில் இருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பேரவையில் சுயேச்சையாக இனி செயல்படுவார்கள். அதே சமயம் குவாரி முறைகேடு வழக்கில் சிறை தண்டனை பெற்று பாஜ எம்எல்ஏ ஜனார்த்தனரெட்டி எம்எல்ஏ தகுதியை இழந்துள்ளார். இதனால் கர்நாடக பாஜவில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜ முன்னாள் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளதால் கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.