Monday, June 23, 2025
Home செய்திகள்Banner News தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி என்பது கானல் நீராகத்தான் இருக்கப் போகிறது: செல்வப்பெருந்தகை தாக்கு

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி என்பது கானல் நீராகத்தான் இருக்கப் போகிறது: செல்வப்பெருந்தகை தாக்கு

by Neethimaan

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி என்பது கானல் நீராகத்தான் இருக்கப் போகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத வகுப்புவாத எதிர்ப்பு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். நேற்று மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் 2026 இல் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் அமைய இருக்கிற கூட்டணிக்கு அ.தி.மு.க. தலைமையேற்கப் போகிறதா ? அல்லது பாரதிய ஜனதா தலைமையேற்கப் போகிறதா?

என்பது முடிவு செய்யாத நிலையில் தன்னிச்சையாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தின் கள நிலவரத்தை முற்றிலும் அறியாமல் பகல் கனவு காண்கிற வகையில் அவர் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிற ஒன்றிய பா.ஜ.க. அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள், ஏற்கவும் மாட்டார்கள். அமித்ஷா பேசும் போது, தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படுவதாக நாடகமாடியிருக்கிறார். தமிழ் மொழியின் மீது உண்மையிலேயே பற்று இருக்குமேயானால், செம்மொழிக்கு மூன்றாண்டுகளில் ரூபாய் 24 கோடி ஒதுக்கி விட்டு,

அதே காலத்தில் 24,000 மக்கள் பேசுகிற சமஸ்கிருத மொழிக்கு ரூபாய் 664 கோடி ஒதுக்கிய நிலையில் தமிழ் மொழியை வஞ்சித்து வருவதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன தேவை? தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை எதிர்த்த தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் ஒதுக்க வேண்டிய ரூபாய் 2152 கோடியை ஒதுக்காமல் வஞ்சித்ததற்கு அமித்ஷா என்ன பதில் கூறப் போகிறார் ? தமிழ்நாட்டில் 1968 முதல் 57 ஆண்டுகளாக தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை தான் நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கு மாறாக, இந்தி மொழியை திணிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் அமித்ஷாவினுடைய கபட நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்.

பா.ஜ.க.வினர் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக அமித்ஷா கூறியிருக்கிறார். அதில் பெருந்திரளானோர் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் முருகனை வழிபட வேண்டுமென்றால் அறுபடை வீடுகளில் உள்ள முருகனை வழிபட செல்வார்களேயொழிய, பா.ஜ.க.வினர் நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிச்சயம் செல்ல மாட்டார்கள். ஏற்கனவே வேல் வைத்து அரசியல் செய்தார்கள், இன்று முருகனை வைத்து அரசியல் செய்ய முற்படுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஏற்கக் கூடிய கொள்கை இல்லாத காரணத்தால் இத்தகைய வழிமுறையை பா.ஜ.க. கையாள்கிறது.

தமிழ்க் கடவுள் முருகன் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் தமிழில் அர்ச்சனை செய்வதற்காக தி.மு.க. அரசு உச்சநீதிமன்றம் வரை போராடி சமஸ்கிருதத்தை அகற்றிவிட்டு, தமிழில் அர்ச்சனை செய்கிற உரிமையை பெற்றது. அன்று சமஸ்கிருதத்திற்காக உச்சநீதிமன்றம் வரைச் சென்று தமிழில் அர்ச்சனை செய்வதற்கு எதிராக வாதாடியவர்களின் வாரிசுகளான பா.ஜ.க.வினருக்கு முருக பக்தர்கள் மாநாடு நடத்த என்ன தகுதி இருக்கிறது? இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அழகிய மணிப்பூர் மலைப் பகுதியை ஆள வக்கற்றவர்கள் தான் பா.ஜ.க.வினர். கடந்த 2022 பிப்ரவரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று பிரேன்சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.

ஆனால், அந்த ஆட்சி மலைப் பகுதியில் உள்ள குக்கி இன மக்களுக்கு எதிராகவும், மெய்த்தி இன மக்களுக்கு ஆதரவாகவும் பாரபட்சமாக ஆட்சி செய்ததால் அங்கே தொடர்ந்து கலவரம் நடைபெற்று நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து இன்றைக்கும் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி முழுமையாக தோல்வியடைந்த காரணத்தினால் அங்கு, கடந்த பிப்ரவரி 13, 2025 இல் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மணிப்பூர் கலவரத்திற்கு அந்த முதலமைச்சர் எந்த அளவிற்கு பொறுப்போ, அதே அளவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பாவார். அங்கே கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவதை தடுக்க முடியாத உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா,

தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது ? உலகம் முழுவதும் சுற்றி வலம் வருகிற பிரதமர் மோடி, எரிந்து கொண்டிருக்கிற மணிப்பூர் மாநில மக்களை சந்தித்து பேச இதுவரை முற்படாதது ஏன் ? ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத பிரதமர் மோடி, எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் கூற மாட்டார், அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார், பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் கூற மாட்டார். கடந்த 11 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை கூட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதில்லை. ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடியின் எதேச்சதிகாரமான செயல்களுக்கு துணையாக இருப்பவர் தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு நடைபெற்று வருகிற மு.க. ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித்ஷா கூறியிருக்கிறார். ஆனால், ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களின்படி கடந்த 7 ஆண்டுகளில் நேரடி வரி மற்றும் ஜி.எஸ்.டி., செஸ் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டிலிருந்து பா.ஜ.க. அரசு வசூலித்த வரி ரூபாய் 7.38 லட்சம் கோடி. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டின் பங்காக வழங்கியது ரூபாய் 2.56 லட்சம் கோடி. அதிகமான நிதியை தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வஞ்சித்து, வாட்டி வதைத்து வசூலித்து விட்டு தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித்ஷா கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? இதற்கு அமித்ஷா பதில் கூறுவாரா ?

எனவே, தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிற பா.ஜ.க.வின் மாய்மால அரசியல் ஒருபோதும் எடுபடாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி என்பது கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi