போபால்: குஜராத் மாநிலம் அகமதபாத்தில் கடந்த சனிக்கிழமையன்று பேசிய காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஆளும் பாஜவுக்கு கட்சியில் இருப்பவர்கள் உதவி செய்வது குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, கட்சியின் முதல்வர் வேலை காங்கிரஸ் தொழிலாளர்கள் மற்றும் தலைவர்களின் இரண்டு குழுக்களாக பிரிப்பதாகும். ஒன்று கட்சி கொள்கைகளை தங்கள் இதயங்களில் சுமந்து பொது மக்களுடன் நிற்பவர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து துண்டிக்கப்பட்டவர்கள்.
இவர்களில் பாதி பேர் பாஜவுடன் தொடர்பில் இருப்பவர்கள். இவர்களை நீக்க வேண்டும் என்று விமர்சித்து இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மற்றும் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங், ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நான் மத்தியப்பிரதேசத்தில் முதல்வராக இருந்தபோது பிரசாரம் செய்வதற்காக குஜராத் சென்றேன். அப்போது ஆர்எஸ்எஸ்க்கு எதிராக பேசவேண்டாம். அப்படி பேசினால், இந்துக்கள் கோபப்படுவார்கள் என்று எனக்கு குஜராத் காங்கிரசார் வாய்பூட்டு போட்டது எனக்கு நினைவில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.