சென்னை: கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பல்லு மதன் (எ) மதனகோபால். டிஜிபி அலுவலகத்தில் இவர் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், நான் பாஜ பட்டியல் அணி சென்னை கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளேன். கடந்த அக்டோபர் 22ம் தேதி பள்ளிக்கரணையில் பெயின்டர் பிரசாத் (28) கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு நான் உதவியதாக எனது வீட்டில் பிரசாத்தின் நண்பர்கள் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசி, மனைவியை மிரட்டி விட்டு சென்றுள்ளனர். ரவுடி தொழிலை விட்டு தற்போது பாஜவில் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஆனால் முன்விரோதம் காரணமாக என்னை பல்வேறு கொலையில் தொடர்புபடுத்தி வருகின்றனர். மேலும், பெயின்டர் பிரசாத் கூட்டாளிகளான ஆதம்பாக்கம் ராபின், தயாளன், ஜோசப், ரூபேஷ் ஆகியோரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவர்களிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.