சென்னை: தமிழ்நாடு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடலூர் பண்ருட்டி அருகே மூதாட்டி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் வழக்கில் விரைவாக காவல்துறையினர் குற்றவாளி சுந்தரவேல் என்பவரை சுற்றி வளைத்துச் சுட்டுப்பிடித்துள்ளனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை; கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸ் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளதைக் கண்டு பொறுக்க முடியாத பழனிசாமி வழக்கம் போல அவதூறு அரசியலை தொடங்கியிருக்கிறார்.
பழனிசாமி ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தையே தாக்கி மிரட்டும் சூழல் நிலவியது, தற்போது அது மாறி பெண்களுக்கு எதிராக எவர் குற்றச் செயலில் ஈடுபட்டாலும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்யப்படுகிறார்கள். 2018 செப்டம்பரில் 60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “18 மாத கைக்குழந்தை முதல் 100 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?’’ என பழனிசாமி ஆட்சியை பற்றித்தான் அன்றைக்கு கேள்வி எழுப்பினார். இதையெல்லாம் மறந்துவிட்டு கூச்சமே இல்லாமல் யோக்கிய சிகாமணி போல பழனிசாமி வேஷம் போடுகிறார்? இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதனையெல்லாம் கண்டு பொறுக்காமல் எங்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடாதா? அதை வைத்து அரசியல் செய்ய முடியாதா என நாள்தோறும் அலைகிறார் பழனிசாமி.
பழனிசாமியின் இந்த அரசியல் மறைமுகமாகப் பெண்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. பெண்களுக்குப் பயத்தை உண்டாக்கி அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் பாஜவின் கொள்கையை பழனிசாமி வழிமொழிவது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்து விட்டார்கள் 2026ல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி. கையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவியையாவது காப்பாற்றிக் கொள்வீரா? இல்லை அதையும் அமித்ஷா காலடியில் அடமானம் வைத்துவிட்டீரா அடிமை பழனிசாமியே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.