கோவை: பாஜவால் தோற்றோம் என்றவர்கள் இன்று பாஜ வேண்டும் என தவம் இருக்கிறார்கள் என அதிமுகவை விமர்சித்து அண்ணாமலை பேட்டியளித்தார். அதிமுக, பாஜ கூட்டணி அமையுமா? அமையாதா? என்ற கேள்வி பல நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிமுக கட்சிக்குள்ளேயே பாஜவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சில தலைவர்கள் முக்கியமாக மேற்கு மண்டல தலைவர்களும், கூட்டணி வேண்டாம் என்று சிலரும் கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது திமுகவை எதிர்க்க யாருடன் வேண்டும் என்றாலும் கூட்டணி வைக்க தயார் என்று கூறி உள்ளார். இந்த சூழல் கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜ கட்சி தீண்டத்தகாத கட்சி, பாஜ கட்சி நோட்டா கட்சி, பாஜவால்தான் தோற்றோம் என்றவர்கள், இன்று பாஜ வேண்டும் என தவம் இருக்கக்கூடிய சூழ்நிலையை ஒவ்வொரு தலைவனும், தொண்டனும் உருவாக்கி இருக்கிறோம். இதற்காக பெருமைப்படுகிறேன்.
கர்வப்படுகிறேன். பாஜ இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். மற்றபடி எந்த கட்சியையும் நான் சிறுமைப்படுத்தி பேசவில்லை. எந்த தலைவரையும் சிறுமைப்படுத்தி பேசவில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி? தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும்? முக்கிய கட்சியாக யார் இருப்பார்? யார் தலைவர்? யார் முதலமைச்சர்? அதையெல்லாம் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். நாங்கள் யாருக்கும் எதிரியில்லை. எங்கள் நோக்கம் பாஜவை நிலை நிறுத்த வேண்டும் என்பதுதான்.இவ்வாறு அவர் கூறினார்.
* சிறுமைப்படுத்த வேண்டாம் விஜய்க்கு அட்வைஸ்
விஜய்க்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்சி நிகழ்ச்சிக்கு 50க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் போட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதில் பதில் அளித்த அண்ணாமலை, ‘‘அது அவர்கள் இஷ்டம். யாரையும் பாதுகாப்புக்கு வைத்துக்கொள்ளலாம். சிஆர்பிஎப் போலீசாரை வெளியே நிற்க வைத்துவிட்டு வேறு பவுன்சர்களை போட்டு நிகழ்ச்சியை நடத்தாதீர்கள்.
அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள் ரேங்கில் இருக்கும் அதிகாரிகள். இந்திய அரசு சொல்லியிருக்காங்க. அவர்கள் தங்கள் கடமையை செய்றாங்க. இந்த சிஆர்பிஎப் போன்ற வீரர்களை சிறுமைப்படுத்தாமல் நடத்துங்கள். அதை தாண்டி உங்களுக்கு என்ன பாதுகாப்பு வேண்டுமோ அதை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.