மும்பை: பாஜ அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து ஒன்றிய அரசின் அவசர சட்டம் குறித்த மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்பட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக போராடி வரும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடு தழுவிய அளவில் சுறு்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
செவ்வாயன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இரண்டு நாள்பயணமாக மகாராஷ்டிரா சென்றுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று முன்தினம் முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து நேற்று தெற்கு மும்பையில் உள்ள ஒய்பி சவான் மையத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து ஆதரவு திரட்டினார். பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார்.
இதனை தொடர்ந்து சரத்பவார் மற்றும் முதல்வர் கெஜ்ரிவால் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர் கெஜ்ரிவால், ‘‘அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் போராட்டத்துக்கு முன்னாள் முதல்வர் சரத்பவார் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். பாஜ அல்லாத அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால், மாநிலங்களவையில் அவசர சட்ட மசோதாவை தோற்கடிக்க முடியும். இந்த சட்டமானது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை பாதித்துள்ளது. அவசர சட்டங்களை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பணி செய்ய அனுமதிக்காதது நாட்டிற்கு நல்லதல்ல. இந்த விவகாரத்தில் பாஜ அல்லாத அனைத்து கட்சிகளும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.