பெரம்பூர்: தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு வீட்டுக்கு வீடு பரப்புரையை நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திருமங்கலம் நேருநகர், கொளத்தூர் தொகுதியில் உள்ள 64, 64அ மற்றும் 69வது வட்டத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர் பாபு, வீட்டுக்கு வீடு பரப்புரையை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வில்லிவாக்கம் மேற்கு பகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் நேருநகர், அண்ணாநகர் 18வது பிரதான சாலையில் நடைபெற்ற அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு காலை உணவு வழங்கினார்.இதையடுத்து நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தின் ஒரு பகுதியாக வீடு வீடாக சென்று பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுப்பட்டோம். செல்லும் இடம் எல்லாம் மக்கள் எங்களை வரவேற்கிறார்கள். தமிழிசை சவுந்தரராஜன் குறித்தான கேள்விக்கு, தமிழிசை கவிதையில் மக்கள் ஏமாறாமல் உள்ளனர்.
அதனால்தான் அவர் நின்ற தேர்தலில் மக்கள் அவருக்கு தோல்வியை பரிசாக அளித்துள்ளனர். அவரை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. ஏற்கனவே நாற்காலி போட்டி கடுமையாக உள்ளது. பாஜகவில் யாருக்கு செல்வாக்கு என்பதை காட்டுவதற்காகதான் தமிழிசை, அண்ணாமலை, நயினார் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன், கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.