புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜ 48 தொகுதிகளை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளை பிடித்தது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 11 நாட்கள் ஆகியும் இன்னும் பா.ஜ சார்பில் முதல்வர் தேர்வு நடைபெறவில்லை. இந்தநிலையில் இன்று பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், நாளை புதிய முதல்வர் பதவியேற்பு விழா நடக்கும் என்றும் தெரிகிறது. இதுகுறித்து முறைப்படி எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க கூடிய மேலிட பார்வையாளர்களும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான பிரமாண்ட ஏற்படுகள் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெல்லி புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நாளை மாலை 4.30 பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்களும், பா.ஜ ஆளும் மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர். இதை முன்னிட்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் 5000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படைகளும் குவிக்கப்பட உள்ளன.
புதிய முதல்வர் யார்?
டெல்லி புதிய முதல்வர் பட்டியலில் பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம்:
* ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா
* விஜேந்தர் குப்தா
* சதீஷ் உபாத்யாய்
* பவன் சர்மா
* ஆஷிஷ் சூட்
* ரேகா குப்தா
* ஷிகா ராய்
* ரவீந்தர் இந்திரஜ் சிங்
* கைலாஷ் கங்வால்