புதுடெல்லி: பாஜ கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டி அளித்த பாஜ செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘‘நாடு முழுவதும் புதிதாக 10 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘நாடு முழுவதும் காங்கிரசை நிராகரிக்கும் மக்கள், ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் பாஜ மீது நம்பிக்கை வைத்து வெற்றி தேடித்தந்துள்ளனர். எனவே கட்சியின் சித்தாந்தத்தை நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு செல்ல வேண்டும்’’ என்றார். புதிய உறுப்பினர் சேர்க்க சுமார் 6 மாதங்கள் நடைபெறும் என்றும் அதன் பிறகு கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.