மும்பை: பாஜக தலைவர்களை உத்தவ் தாக்கரே விமர்சித்த நிலையில் ஒன்றிய அமைச்சரின் ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டனர். மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், யவத்மாலில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதித்தனர்.
அதுதொடர்பாக வெளியான வீடியோவில், ‘பையை மீண்டும் மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏன்? எனது உடமைகளை பரிசோதிக்கும் உங்களது பெயர்கள், பதவிகள் மற்றும் நியமனக் கடிதங்களைக் காட்டுங்கள்? இதுவரை நீங்கள் எத்தனை பேரை பரிசோதித்துள்ளீர்கள்? என்னை மட்டுமே பரிசோதிக்கின்றீர்கள். மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உடைமைகளை தேர்தல் ஆணையம் சரிபார்க்கிறதா? என்று உத்தவ் தாக்கரே கேட்டார்.
இந்நிலையில் பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரி சென்ற ஹெலிகாப்டர் லாத்தூரில் தரையிறங்கியது. அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், அமைச்சரின் உடைமைகளை சோதனையிட்டனர். உத்தவ் தாக்கரேவின் வீடியோ வெளியான நிலையில் தற்போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.