Wednesday, April 17, 2024
Home » பாஜக ஒதுக்கியது ஒரே ஒரு தொகுதிதான் சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

பாஜக ஒதுக்கியது ஒரே ஒரு தொகுதிதான் சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டி: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

by Karthik Yash

அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக வலம் வருகிறார். அவர் அதிமுக தன்னுடையதுதான் என்று கூறி வழக்குத் தொடர்ந்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணி சேர பல முறை முயன்றும் முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி, பாஜ கூட்டணியில் இருக்கும்வரை அவரால் கிட்ட நெருங்க முடியவில்லை. மோடியை சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லை. இந்நிலையில், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அதன்பின்னர் வேண்டா வெறுப்பாக பாஜவினர் கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும், அடிக்கடி ஓபிஎஸ்சை அவமானப்படுத்தி வந்தனர். வெளிப்படையாக கூட்டணிக்கு அழைக்கவில்லை. மாநில நிர்வாகிகளோ, அண்ணாமலையோ நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வத்தை பார்க்கவில்லை. ஆனாலும் சேலத்தில் மோடி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது மைக்கை முன்னாள் எம்பி ராமலிங்கம் பறித்துக் கொண்டார்.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் பெருத்த அவமானம் அடைந்தார். தற்போது கூட்டணியில் 3 சீட் வேண்டும் என்றார். பாஜக கட்சி அலுவலகத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்றவர்களுக்கெல்லாம் சீட் கொடுக்கும் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம் கேட்டபோது ஒரு சீட்தான் என்று கை விரித்தார். அதுவும் தாமரை சின்னம்தான் என்றார். இதனால் இந்த அவமானத்தை ஏற்று வேறு வழி இல்லாமல் ஒரு சீட் வாங்கிக் கொண்டு பாஜக கூட்டணியில் இருப்பதா அல்லது தேர்தலைப் புறக்கணிப்பதா என்று இன்று மாவட்டச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவரே முடிவு எடுக்கும்படி அவருக்கு அதிகாரம் வழங்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நேற்று பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினோம். தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கருத்துகளையும் கேட்டறிந்தோம். நம்முடைய இலக்கு இரட்டை இலை சின்னத்தை பெறுவது தான் என்பதை இலக்காக கொண்டு அதை பெறுவதற்கு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். சட்டப் போராட்டத்தில் இன்னும் முழுமையான இறுதி தீர்ப்பு பெறுவதற்காக பல்வேறு நிலைகளில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகின்ற நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வந்து விட்டது.

எனவே தேர்தல் களத்தில் நின்று தொண்டர்கள் பலத்தை அறிவதற்கு 15 தொகுதிகளை கேட்டு இருந்தோம். அதன்படி எங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்ற நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதை பெறுவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் தொண்டர்களின் பலத்தை நிரூபித்து காண்பதற்காக ஒரு தொகுதியில் முடிவு செய்துள்ளோம். சுயேட்சை சின்னத்தில் தான் நாங்கள் நிற்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். ஒரு தொண்டரை நிறுத்துவதை விட நானே களத்தில் நின்று பலத்தை நிரூபிக்க உள்ளோம்.

எங்களுக்கு அதிகமான தொகுதிகளை தருவதற்கு விருப்பம் தெரிவித்தனர். தற்போது இரட்டை இலை சின்னம் இல்லாத நிலையில் அதிகமான இடங்களில் சுயேட்சை சின்னத்தில் நிற்க முடியாத சூழ்நிலை இருப்பதால் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையில் இருப்பதால் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். பாஜக கூட்டணியில் தான் நிற்கிறோம். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து இல்லை, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக நிற்கிறோம். சின்னத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம், வேட்பு மனுதாக்கலில் தெரியும். உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

You may also like

Leave a Comment

five × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi