புதுடெல்லி: பேரவை தேர்தலில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் பாஜவை நிச்சயம் தோற்கடிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதிபட தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன் எக்ஸ் தள பதிவில், “ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது, அவர்களுக்கு வஞ்சகம் செய்வது மட்டுமே பாஜவின் ஒரே கொள்கை. ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் மார்ச் மாதம் 28.2 சதவீதமாக இருந்தது.
அரசு போட்டி தேர்வு வினாத்தாள் கசிவுகள், லஞ்சம், பரவலான ஊழல் ஆகியவை கடந்த 4 ஆண்டுகளாக அரசு துறைகளில் இளைஞர்களை பணியமர்த்துவதை தாமதப்படுத்தி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் வியக்கத்தக்க வகையில் 65 சதவீத அரசு துறை பணியிடங்கள் கடந்த 2019 முதல் காலியாக உள்ளன. ஜம்மு காஷ்மீரில் 60,000-க்கும் மேற்பட்ட அரசாங்க தினக்கூலிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தும் ஒருநாளைக்கு ரூ.300 மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.
அவர்கள் நீண்டநாள் பணியில் இருந்தாலும் மின்சாரம், பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் போன்ற அத்தியாவசிய துறைகளில் கூட ஒப்பந்த அடிப்படையிலேயே இருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் தொழில்துறை வளர்ச்சிக்கு பாஜ உறுதி அளித்தாலும், அங்கு பெரியளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. விவசாயம், உணவகம், விடுதி, சுகாதாரம் போன்ற துறைகளில் தனியார் முதலீடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
2021ம் ஆண்டில் புதிய தொழில்துறை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் ஜம்மு காஷ்மீரில் வெறும் 3 சதவீத முதலீடுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் மேம்பாட்டு தொகுப்பு 2015ன்கீழ் 40 சதவீத திட்டங்கள் நிலுவையில் உள்ளன. பாஜ அரசால் ஏமாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வௌியேறும் வழியை காட்டுவார்கள்” என்று புள்ளிவிவரங்களை பட்டியலிட்டு தெரிவித்துள்ளார்.