நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாஜ தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் யாரை ஆதரிக்கிறார்களோ அந்த கூட்டணியே தற்போது ஆட்சியமைக்கும் சூழலில் அவர்கள் பாஜவை ஆதரித்ததால் பாஜ மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்தது.
நாடாளுமன்றத்தில் பாஜ கொண்டுவரும் திட்டங்களுக்கு கூட சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவு கொடுத்தால் மட்டுமே நிறைவேறும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்தம் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. அதில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக இஸ்லாத்தை பின்பற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட நிலத்தில் உரிமையுள்ள எந்தவொரு நபரும் வக்புக்கு தனது சொத்தை நன்கொடையாக அளிக்கலாம் என்பது உள்பட 40 திருத்தங்களுடன் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 8ம் தேதி தாக்கல் செய்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு பரிந்துரை செய்தது. பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த மசோதாவை ஆய்வு செய்து வருகிறது. மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) சிராக் பஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கேள்வி எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை, மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மொகத் ஜமாகான், நீர்வளத் துறை அமைச்சர் விஜயகுமார் சவுத்ரி ஆகியோர் சந்தித்து, வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வக்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு நிதிஷ்குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் கூறினர். ஐக்கிய ஜனதா தளம் முடிவால் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உயரதிகாரிகள் நியமனத்தில் லேட்டரல் என்ட்ரி முறையை பாஜ கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன (Lateral entry) அறிவிப்பு விளம்பரத்தை ரத்து செய்யுமாறு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய (யுபிஎஸ்சி) தலைவருக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கடிதம் எழுதி முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு பாஜ கூட்டணி கட்சிகளான லோக் ஜனசக்தி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த சட்டமும் நிறைவேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் செய்தது போன்று மோடி அரசு, நினைக்கும் சட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியாது. இது ஆரம்பம். இனிமேல்தான் மோடி அரசுக்கு சிக்கல் ஆரம்பிக்கும். மக்களுக்கு தேவையான சட்டங்களை ஏகோபித்த ஆதரவுடன் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.