திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பட்டியலின இளைஞரை தாக்கிய வழக்கில், பாஜக ஒன்றிய பொதுச் செயலாளர் சதீஸ் குமார் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் சங்கர். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பாஜக தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ள சதீஸ்குமார் நேபவர் நடத்தி வரும் ஸ்ரீ அருள் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிறுவனத்தில் பழைய இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். அதற்கு கடந்த 4 மாதங்களாக தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று பாஜக நிர்வாகி சதீஸ் குமார், தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை சங்கர் வீட்டிற்கு அனுப்பி அவரை அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். பிறகு அலுவலகத்தின் ஷட்டரை மூடி, ஜாதி பெயரை குறிப்பிட்டு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் சங்கரை சதீஸ் குமார் தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சங்கர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தன்னை தாக்கிய பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் சங்கர் அளித்த புகாரின் பேரில் சதீஸ்குமாரை காங்கேயம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சதீஸ்குமார் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.