மரக்காணம்: கூட்டணி முறிந்ததை அதிமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், மரக்காணம் அருகே நள்ளிரவில் பாஜ கொடி கம்பம் உடைக்கப்பட்டது. இதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட மண்டவாய் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் அருகே பல்வேறு கட்சி கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் பாஜ கொடி கம்பம் உடைக்கப்பட்டு கிடந்தது. பீடம் உடைக்கப்பட்டு இரும்பு பைப்பிலான பாதி கம்பம் மற்றும் கொடியை காணவில்லை. தகவல் அறிந்த பாஜவினர் அங்கு திரண்டு, கொடிக்கம்பத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் மரக்காணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதிமுக, பாஜவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்ததையடுத்து இரு கட்சியினரும் அப்பகுதியில் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.