தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் டூவீலரில் சென்ற திமுக கவுன்சிலரை வழிமறித்து தாக்கிய, பாஜ ஒன்றிய இளைஞர் அணி தலைவரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அவர் மீது, ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜ். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். திமுகவை ேசர்ந்த இவர், தம்மம்பட்டி போராட்சி 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
கடந்த 11ம்தேதி தம்மம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தில், தனது டூவீலரில் சென்ற போது, பின்னால் டூவீலரில் வந்த கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த பாஜ கட்சியின் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் கே.கே.எஸ்.குமார்(எ) செல்வக்குமார், நடராஜை திடீரென வழிமறித்து, டூவீலர் செல்ல வழிவிட மாட்டாயா எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரை சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நடராஜ், தம்மம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு, செல்வக்குமாரை கைது செய்தனர். மறுநாள் அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. செல்வகுமார் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளது. டிரைவராக உள்ள அவர், பல்வேறு கட்டப் பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் செல்வகுமாரை கைது செய்த போது, பாஜ பிரமுகர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், நீதிமன்றத்தின் மூலம் அவர் ஜாமீன் பெற்றார்.