சென்னை: ‘‘பாஜவின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: முதன்முதலில் தொகுதி மறுவரையறை தொடர்பாக குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த பிரச்னையை அவர் கையாண்ட பின்னர் தான் பாதிப்புக்குள்ளாக கூடிய அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்க்க தொடங்கினர். ஒன்றிய அரசு வழங்கக்கூடிய பொய்யான வாக்குறுதியை போல இதனால் இங்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி பாஜவின் ஊதுகுழலாக தற்பொழுது பேசி வருகிறார். பாஜ அரசு அவரை மிகவும் தந்திரமாக கையாண்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்கு குறை கூறக்கூடிய அளவில் எந்த ஒரு குறைகளும் இல்லை. ஆகவே இதுபோன்ற கேவலமான அறிக்கைகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
உலக நாடுகள் பெரும்பாலான நாடுகள் தமிழ்நாடு முதல்வர் கொண்டுவந்த காலை சிற்றுண்டி திட்டத்தை வெகுவாக பாராட்டி புகழ்ந்து வருகிறார்கள். இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி இதுபோன்று மட்டுமல்லாமல், தேர்தல் நேரம் நெருங்குவதால் இதைவிட கேவலமான அறிக்கைகளையும் தொடர்ந்து வெளியிடுவார். நாடாளுமன்ற தேர்தலில் 8 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தார். மோடி வந்த பிறகுதான் நாம் 40க்கு 40க்கு வெற்றி பெற்றோம். பிரதமர் மோடி பலமுறை தமிழகம் எங்கும் அவரது முயற்சிகள் அனைத்தும் ஜீரோவாக தான் இருந்தது. புதிதாக அரசியலுக்கு வரக்கூடியவர்கள் வரலாற்றினை படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.