Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாஜவின் தில்லுமுல்லு அரசியலை முறியடிக்க இந்தியா கூட்டணி ஒன்றாக தேர்தலை சந்திக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:  டெல்லியில் பாஜவின் வெற்றி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் உள்ளது. காங்கிரசும் ஆம்ஆத்மியும் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். தனித்து நின்று வாக்குகளை சிதறடித்துள்ளனர்.

காங். கட்சிக்கு இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துகிற அனைத்து தார்மீக பொறுப்புள்ளது. சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போது தான் பாஜ உடைய தில்லுமுல்லு அரசியலை முறியடிக்க முடியும். வழக்கத்திற்கு மாறாக டெல்லியில் பாஜகவினர் வாக்குகளுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள். பொருள் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். பாஜ ஆட்சி அமைவதை, தேசத்தின் பின்னடைவாக கருத வேண்டும்.

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். கூட்டணி கட்சிகளுக்கும், திமுகவுக்கும் இடையே முரண்பாடான பிரச்னைகளின் அடிப்படையில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது இயல்புதான். பிரச்னைகளின் அடிப்படையில் நாங்கள் அரசுக்கு சிலவற்றை சுட்டிக் காட்டுவோம். அல்லது கண்டிக்கிறோம் என்றால் அது கூட்டணிக்கு பாதகத்தை உருவாக்காது. இடதுசாரிகளோ, விடுதலை சிறுத்தைகளோ, திராவிட கட்சிகளின் கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு 100 விழுக்காடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. பீகார், ஆந்திரா ஆகிய 2 மாநிலங்களை மட்டும் மையமாக வைத்து கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதில் கூட்டணிக்கு துணையாக இருக்கக்கூடிய சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை தக்க வைப்பதில் ஒன்றிய அரசு மிக கவனமாக இருக்கிறது. பாஜ அல்லாத பிற கட்சிகள் ஆளக்கூடிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜ அரசு ஓரவஞ்சனையாக செயல்படுகிறது. அதைத்தான் தமிழக முதல்வர் நிதியும் இல்லை. நீதியும் இல்லை என வருத்ததுடன் தெரிவித்தார். இவ்வாறு பேசினார்.

* ஆர்.எஸ்.எஸ். சொல்வதைதான் ஆளுநர் செய்வார்

திருமாவளவன் கூறுகையில், ‘உச்சநீதிமன்றம் தமிழக கவர்னருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆர்.என்.ரவியை பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் தான் தலைமையிடம். ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறதோ, அதை தான் செயல்படுத்துவார். அவருக்கு எந்த மரபுகள் மீதும் நம்பிக்கை கிடையாது. அவருக்கு அரசியல் நெறிமுறைகள் கிடையாது. அவர் 100 விழுக்காடு ஆர்எஸ்எஸ் தொண்டர். எனவேதான், தமிழ்நாட்டில் இடையூறுகளை ஏற்படுத்துவது, நெருக்கடிகளை ஏற்படுத்துவது என்கின்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆளுநர் ஆர்என்.ரவி செயல்பட்டு வருகிறார்’ என்றா.