சென்னை: அண்ணாமலை அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில், பாஜ கட்சி பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் தமிழிசை சவுந்திரராஜனுக்கு இடம் தரப்படவில்லை. மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை பாஜ தேசிய தலைமை நேற்று அறிவித்துள்ளது. இதில் தமிழிசை மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இடம்பெறவில்லை. பாரம்பரிய மிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த தமிழிசை, 2014ம் ஆண்டு தமிழக பாஜ தலைவரானார். தமிழகத்தில் பாஜ கொஞ்சம் தெரிவதற்கு தமிழிசையும் முக்கிய காரணமாக இருந்தார்.
தனது ஆளுநர் பதவி முடிவதற்கு 4 மாதங்களுக்கு முன்பு பதவியை நீட்டித்து தருமாறு பிரதமர் மோடியை அணுகினார் தமிழிசை. அதற்கு மோடி இசைவு தெரிவிக்கவில்லை. அதனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் தரும்படி கேட்டார். போனால் போகட்டும் என்ற அளவில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கியது. இதனால், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் அரசியல் களத்தில் ரீ என்ட்ரி ஆனார்.
தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சர் ஆகிவிடலாம் என்று குறிவைத்த அவர் தோல்வி அடைந்து ஏமாற்றத்துக்கு உள்ளானார். கவர்னர் பதவியும் போச்சு, தேர்தலில் வெற்றியும் பெறவில்லை என்ற நிலையில், அவர் மீண்டும் தமிழக பாஜ தலைவர் பதவியை குறி வைத்து காய் நகர்த்த தொடங்கினார். இதனால் அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இதனை பயன்படுத்திய அண்ணாமலையின் வார் ரூம் நிர்வாகிகள் தமிழிசையை தாறுமாறாக விமர்சிக்க தொடங்கினர்.
இதற்கு தமிழிசையும் பதிலடி கொடுத்தார். இதன் அடுத்தகட்டமாக பொதுவெளியில் தமிழிசையை, உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலைக்கு ஆதரவாக எச்சரித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த சூழ்நிலையிலும் இதனை சமாளித்து, கட்சி பணியில் தீவிரம் காட்டிய தமிழிசைக்கு, அண்ணாமலை வெளிநாடு சென்ற பிறகு முக்கிய பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது தேசிய தலைமை அறிவித்த குழுவில் கூட தமிழிசையின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் பாஜ தலைமை அவருக்கு இடம் கொடுக்காமல் ஓரங்கட்டியுள்ளது நிருபணமாகியுள்ளது. தமிழக பாஜவில் நியமனம் செய்யப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள எச்.ராஜா, எஸ்.ஆர்.சேகர், கனகசபாபதி ஆகியோர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள். சக்கரவர்த்தி நாயுடு, ராம சீனிவாசன் ரெட்டியார் மற்றும் முருகானந்தம் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இதனால் இக் குழுவில் நாடார் மற்றும் தலித்துகளின் பிரதிநிதித்துவம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டுள்ளது என பாஜ வட்டாரத்தில் அதிருப்தி நிலவுகிறது. அதன்படி பார்த்தால், தமிழிசை மட்டுமல்ல நாடார் சமூகத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக பாஜவினர் மத்தியில் பேசப்படுகிறது.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.