ஹைதராபாத் : பாஜகவில் உள்ள நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தெலங்கானா அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அவருக்கு பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் வழங்கப்பட்டது.தொடர்ந்து, பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவிய விஜயசாந்தி, 2020ம் ஆண்டு மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார்.இந்த நிலையில், நடிகை விஜயசாந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தெலங்கானாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் நடிகை விஜயசாந்தியின் பெயர் இடம்பெறவில்லை.
அதே வேளை பாஜக தலைவர்கள் தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும் அவர்களுடன் கூட்டங்களில் விஜயசாந்தி பங்கேற்கவில்லை இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பிஆர்எஸ் குடும்ப ஆட்சியில் இருந்து தெலுங்கானா மக்களை காப்பாற்ற காங்கிரசில் இணைந்து போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.