புதுடெல்லி: பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்றிரவு பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நவம்பர் 7ம் தேதியும், மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதியும் நடைபெறும். மிசோரமில் நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறும். இந்நிலையில் மேற்கண்ட 5 மாநில தேர்தல்களுக்கான வேட்பாளர்களை இறுதிசெய்து, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் இன்றிரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கு 136 வேட்பாளர்களையும், ராஜஸ்தானில் 200 தொகுதிகளுக்கு 41 வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. லோக்சபா எம்பிக்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பலருக்கு, சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இன்றைய மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் 5 மாநில வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும், தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.