சேலம்: பாஜவின் பி டீம் அதிமுக என்பது தவறு, எப்போதுமே அதிமுக ஒரிஜினல் டீம் என, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் சீலநாயக்கன்பட்டியில், அதிமுக சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அதிமுக சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளது என்று தோற்றத்தை, கடந்த காலத்தில் வேண்டுமென்றே உருவாக்கினர்.
தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறு பிரச்னை கூட ஏற்படாமல், பாதுகாப்பாக ஆட்சி நடத்தினோம். எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்களுடைய மதம் அவர்களுக்கு புனிதமானது. யாரும், யாருக்கும் அடிமை கிடையாது, எல்லோரும் சுதந்திரமாக வாழவேண்டும். நான் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவன், அனைத்து மதத்தையும் நேசிக்கக் கூடியவன், எந்த மதத்திற்கும் அதிமுக விரோதி கிடையாது. அதிமுகவில் ஆண், பெண் என்ற இரண்டு ஜாதி மட்டும் தான்.
தேர்தல் நேரத்தில் சூழ்நிலைக்கேற்பவே பாஜவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால், கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது வேறு. இன்னும் அதிமுக பாஜவின் பி டீமாக உள்ளது என்கின்றனர். ஆனால், அதிமுக ஏ டீமும் இல்லை, பி டீமும் இல்லை. அதிமுக எப்போதும் ஒரிஜினல் டீமாக தான் உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.