சென்னை: தொடர்ந்து பாஜக அவமானப்படுத்தி வருவதால் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளை சென்னையில் நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இதில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் ேதால்விக்கு பாஜக தான் காரணம் என்று அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது. மேலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டதால் தான் பாஜவுக்கு பின்னடைவு ஏற்பட்டது என்று பாஜ தரப்பில் குற்றச்சாட்டை சுமத்தினர். இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்குள் மோதல் போக்கு நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ தலைவர் அண்ணாமலை இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. ஏனென்றால் இருவரும் மேற்கு மண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்பதோடு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் யார் பெரியவர்கள் என்பதில் இகோ இருந்து வருகிறது.
இந்த ேமாதல் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அண்ணா குறித்து கருத்து தெரிவிக்க அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. அண்ணா குறித்து பேசியதற்கு அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சொன்ன கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறிவிட்டார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர்.
வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென அறிவித்தார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார்.அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றியதற்கு அதிமுகவினர் பட்டாசு ெவடித்து கொண்டாடினர். மீண்டும் வராதீர்கள் என்ற வாசகம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் சமூ வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ அதிமுக குறித்தோ கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என பாஜகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டது. அதேபோல, பாஜகவை விமர்சிக்க கூடாது என அதிமுகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
இதனை அடுத்து, அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஐந்து முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் தெரிவிக்க அவசர, அவசரமாக டெல்லிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட திட்டமிட்டிருந்தனர். சந்திப்பின் போது பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தவும் இருந்தனர். ஆனால், அண்ணாமலையை மாற்ற முடியாது என்ற முடிவில் அமித்ஷா இருந்ததால் அவர், அதிமுக தலைவர்களை சந்திக்க மறுத்து விட்டார். தொடர்ந்து அதிமுக தலைவர்கள் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர். அப்போது அவரும் அண்ணாமலையை மாற்ற முடியாது. அவர் மாநில தலைவராக நீடிப்பார். போய் தேர்தல் வேலையை கவனிக்கும்படி ஜே.பி.நட்டா கூறிவிட்டார். இதனால் ஏமாற்றத்துடன் அதிமுக தலைவர்கள் தமிழகம் திரும்பினர். இது எடப்பாடிக்கு பெரும் அவமானமாக போய்விட்டது.
இதனால், அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதில் ரெடியாக இருக்கிறார். தமது மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். ஆனால், சில முன்னாள் அமைச்சர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் போன்றவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதா? இல்லை என்றால் அவமானத்தை தாங்கி விட்டு பாஜக கூட்டணியில் தொடர்வதா? என்பது தொடர்பாக முடிவு எடுப்பது தொடர்பாக நாளை மாலை அவரசமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டியிருக்கிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இப்போது திரும்ப என்ன முடிவு எடுக்க போகிறார்கள். அதாவது, அதிமுக கூட்டணியில் பாஜ இல்லை என்பதை தொடர்வதா? அல்லது கூட்டணி தொடர்வதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இதனால், நாளை மாலை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.