சென்னை: ‘‘இனி எந்த காலத்திலும் அதிமுக, பாஜவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்’’ என்று எடப்பாடி பழனிசாமி தன் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா நேற்று முன்தினம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதிமுக கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியினர் இப்போதே தயாராக வேண்டும். ஒரு பூத்துக்கு 19 பேர் பணியாற்ற வேண்டும். ஒரு தொகுதிக்கு 2 ஆயிரம் பூத் அமைக்க வேண்டும். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் 19 பேரில் இளைஞர், பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 18 வயது முதல் 25 வயது வரையிலான நபர்களையே இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் சேர்க்க வேண்டும். தேர்தல் பணிகளில் மாவட்ட செயலாளர்கள் தலையீடு இருந்தால் கட்சி தலைமைக்கு நேரடியாக புகார் அளிக்கலாம்.
இந்த நேரத்தில் உங்களிடம் ஒன்றை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமின்றி, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன். எனவே, அதிமுக கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பேச்சாளர்கள் மக்கள் மத்தியில் பேசும்போது இதனை நீங்கள் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லுங்கள். பாஜவுடன் அதிமுக இனி எந்த காலத்திலும் கூட்டணி வைக்காது என்பதை தெளிவாக எடுத்துக் கூறுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.