சென்னை: சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாஜவில் இருந்து அதிமுகவுக்கு மீண்டும் இழுக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையால் அண்ணாமலை கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
அதிமுகவில் சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் அவருக்கு ஆதரவாக செயல்பட்டார். இவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்து வந்தார். அந்த விசுவாசத்துக்கு பரிசாக அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மாணிக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறச் செய்தார்.
இவருக்கு இந்த பதவி வழங்கியதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, மதுரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. அதனால், அவரை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் புறக்கணித்தனர். அந்த பதவிக்கான அங்கீகாரத்தை மதுரை மாவட்டத்தில் அவருக்கு வழங்கவில்லை என்று மாணிக்கம் வருத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிமுகவில் இருந்து திடீரென விலகி மாநில பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மாணிக்கம் பாஜவில் இணைந்தார்.
அப்போது அவர் கூறும்போது, “என்னை யாரும் வற்புறுத்தி பாஜவில் சேர்க்கவில்லை. கொள்கை ரீதியாக ஒரு முடிவெடுத்துவிட்டேன். முன்பு உழைக்க வாய்ப்பு இல்லாத இடத்தில் இருந்தேன். தற்போது உழைக்கிற இடம் தேடி வந்து இருக்கிறேன்” என்றார். இந்நிலையில் பாஜ கூட்டுறவு பிரிவு மாநில தலைவரும், சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான கே.மாணிக்கம் நேற்று பாஜ கட்சியில் இருந்து விலகி, சென்னையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். வழக்கமாக கூட்டணி கட்சிகளுக்குள் ஒருவரை ஒருவர் இழுத்து, தங்கள் கட்சியில் சேர்க்க மாட்டார்கள்.
ஆனால், பாஜவில் இருந்து முன்னாள் அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் அதிமுகவுக்கு இழுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் அதிமுகவில் இருந்து பாஜவுக்கு சில நிர்வாகிகளை அண்ணாமலை இழுத்து சேர்த்துக் கொண்டார். இந்த சம்பவத்துக்கு அதிமுக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் சில மாதங்களாக இரண்டு கட்சி தலைவர்களும் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை இழுக்கும் சம்பவம் அந்த கட்சி நிர்வாகிகள் இடையே மோதல் போக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கையால் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் அதிருப்தி உள்ளார்.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் அதிமுக – பாஜ கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் கூட்டணி தொடருமா என்பது தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் தெரியவரும். மேலும், தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்தார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்த பிறகும் கட்சி மேலிடமும் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய திருமண நிகழ்ச்சியில் அண்ணாமலையுடன் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகியான விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி (எ) ரகுராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, பாஜவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீண்டும் அதிமுகவுக்கு இழுக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடர் கதையாக நடக்கும்” என்றார்.