சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 50 சீட், கூட்டணி அமைச்சரவை என்று நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பேசியதால், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. திமுக, அதிமுக, பாஜ ஆகிய கட்சிகள் அணி அமைத்துப் போட்டியிட்டன. அதில் தமிழகம் மற்றும் புதுவை என 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜ விரும்பியது.
ஆனால் அதிமுக விரும்பவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவ்வளவுதான் அவர் திடீரென டெல்லி அழைக்கப்பட்டார். அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 3 கார்கள் மாறி மாறிச் சென்று அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். பூட்டிய அறையில் கூட்டணி முடிவு அறிவிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி வைத்த ஒரே ஒரு கோரிக்கை, அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதுதான். அதை அமித்ஷா ஏற்றுக் கொண்டார். அதன்படி அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக்கப்பட்டார்.
அப்போது சென்னையில் பேட்டி அளித்த அமித்ஷா, ‘தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். பாஜவினரும் அப்படியே கூறி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, அமித்ஷா அவ்வாறு சொல்லவில்லை. அதிமுக, பாஜ கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று அமைச்சரவை அமைக்கப்படும் என்றுதான் கூறினார். கூட்டணி அமைச்சரவை என்று சொல்லவில்லை. நீங்கள் பேட்டியை சரியாக கவனிக்கவில்லை என்று மறுத்தார். ஆனால் அமித்ஷா இந்தியில் பேசினார். இந்தி தெரியாததால் எடப்பாடி பழனிசாமியும் என்ன சொல்கிறார் என்று தெரியாமல் அருகில் சத்தமில்லாமல் அமர்ந்திருந்தார்.
இந்தநிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 7ம் தேதி மதுரை வந்தார். மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் 50 தொகுதிகளை அடையாளம் காணவேண்டும். அதில் பாஜ போட்டியிடும். தமிழகத்தில் அதிமுக, பாஜ கூட்டணி அமைச்சரவை அமைக்கப்படும் என்று பேசினார். எடப்பாடி பழனிசாமி என்னதான் கூட்டணி அமைச்சரவை இல்லை என்று அறிவித்தாலும், கூட்டணி அமைச்சரவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ய முடியாத நிலைதான் தற்போது தமிழகத்தில் உள்ளது.
அதிமுக கூட்டணியைக் கூட டெல்லி பாஜதான் முடிவு செய்யக்கூடிய நிலை உள்ளது. இதனால் அதிமுகவிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் பாஜ 50 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக கூட்டணியில் கடந்த முறை பாஜ 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை 50 தொகுதிகளை குறி வைத்துள்ளது. கடந்த முறை பாமக 23 தொகுதிகளில் அதாவது பாஜகவை விட 3 தொகுதி அதிகமாக வேண்டும் என்று போட்டியிட்டது. ஏனெனில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக பாமக இருந்தது.
ஆனால் தற்போது அக்கட்சி தந்தை, மகனுக்கிடையே நடைபெறும் அதிகார போட்டியில் நிலைகுலைந்துள்ளது. இதனால் பாமக இந்த முறை பாஜவை விட அதிக சீட்டுகள் கேட்டு பெற முடியாத நிலைதான் தற்போது உள்ளது. அதே தொகுதியை பெற முடியுமா என்ற நிலை உள்ளது. ஆனால் ராமதாஸ் இந்த முறை கூட்டணியை முடிவு செய்ய இருப்பதால், அவர் குறைந்தது 50 தொகுதிகளாவது கேட்பார். அதேபோல கடந்த முறை தேமுதிக, டிடிவி தினகரன் ஆகியோர் தனியாக கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தனர்.
இந்த முறை அவர்களும் பாஜ கூட்டணியில் இணைந்துள்ளனர். இதனால் அவர்களில் தேமுதிக குறைந்தது 25 தொகுதிகளாவது கேட்கும். அதுதவிர டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலா 10 சீட் வேண்டும் என்று கேட்கின்றனர். இதைத் தவிர புதிய தமிழகம், தமிழக முன்னேற்றக் கழகம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட சில சிறிய கட்சிகளும் உள்ளன. அவர்களும் தொகுதிகளை கேட்கின்றனர். இப்படி பார்த்தால், 130 தொகுதிகளுக்கு மேல் கூட்டணிக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது வரும்.
அப்படி என்றால் அதிமுக 75 முதல் 100க்கும் குறைவான தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். இதனால் இந்த முறை வசமாக பாஜவிடம் அதிமுக சிக்கிக் கொண்டு தவியாய் தவித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுகவிடம் எதுவும் கேட்காமல் பாஜ 50 தொகுதி, கூட்டணி அமைச்சரவை என்றெல்லாம் பேசி வருவது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாததால் தவித்து வருகின்றனர்.
* அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால்… கட்சிகளுக்குள் குழப்பம்
பாஜவே 50 சீட் கேட்டால், பாமக, தேமுதிக கட்சிகளும் அதிக சீட் கேட்கும். இதனால் அதிமுக 75 சீட்டுகளில்தான் போட்டியிடக்கூடிய நிலை உருவாகும். இதனால் அவர்கள் 75 தொகுதிகளில்தான் போட்டியிடுவார்களா அல்லது கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை கொடுப்பார்களா என்ற சந்தேகம் மற்ற கட்சிகளுக்கு உருவாகியுள்ளது. எப்படியும் பாஜவின் தொகுதிகளை குறைக்க முடியாது. இதனால் அதிமுக மற்ற கட்சிகளின் சீட்டுகளைத்தான் எடுப்பார்கள். இதனால் மற்ற கட்சிகளின் நிலை என்ன ஆகும் என்று இப்போதே கூட்டணிக் கட்சி தலைவர்கள் குழப்பமடையத் தொடங்கிவிட்டனர்.
* நயினாரை அவமதித்த அண்ணாமலை
மதுரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்துக்கு முன்னதாக கூட்டம் குறித்து மாநில நிர்வாகிகள் கூட்டம் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் மாநாடு தொடங்கியவுடன் பத்திரிகையாளர்களை வௌியில் அனுப்பிவிட்டு நாம் பேசலாம் என்று முடிவு எடுத்துள்ளனர். அதன்படி அமித்ஷா வந்தவுடன், பத்திரிகையாளர்கள் வெளியில் செல்ல வேண்டும் என்று ராமசீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார். பத்திரிகையாளர்களும் வெளியில் செல்ல ஆரம்பித்தனர். அப்போது அமித்ஷாவிடம் அண்ணாமலை, பத்திரிகையாளர்கள் இருக்கட்டும் என்று கூறினார். அவரும் சம்மதித்தார்.
இதனால் அண்ணாமலை சொன்னவுடன் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதைப் பார்த்ததும் நயினார் நகேந்திரன் கடும் அதிர்ச்சி அடைந்தார். நிர்வாகிகள் கூட்டத்தில், பத்திரிகையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறியிருக்கலாம். அப்படி சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு அமித்ஷாவிடம் அனுமதி வாங்கி, தான் இன்னும் மறைமுகமாக மாநில தலைவர்தான் என்று அவ்வளவு பேர் முன்னிலையிலும் காட்டிவிட்டார். இது நயினாரை நேரடியாக அவமானப்படுத்திவிட்டார். அவர் மாநிலத் தலைவராக இருந்தபோது இவ்வாறு யாராவது செய்தால், சும்மா இருப்பாரா? தேவையில்லாமல் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று நயினாரின் ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.