சென்னை: அதிமுக உடனான கூட்டணி முறிந்துவிட்டதா என்பது பற்றி பாஜக நாளை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிமுகவும் – பா.ஜ.கவும் கூட்டணி கட்சிகளாக இருந்தன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சந்திக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து கடுமையான விமர்சனம் செய்து வருகிறார் என புகார் கூறியதாக தகவல்கள் வெளியானது. அதாவது டெல்லி மேலிடம் தன்னை கலந்தாலோசிக்காமல் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட்டணி டீல் செய்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலை இவ்வாறு பா.ஜ. மேலிடத்திற்கும், அதிமுகவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் அண்ணாவைப் பற்றியும், நேற்று பெரியாரை பற்றியும் அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். இந்நிலையில் அண்ணா பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பா.ஜ. இல்லை என்று கூறினார். மேலும் இது கட்சியின் கருத்து தான் என தெளிவுபடுத்தினார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதிமுக உடன் கூட்டணி முறிந்துவிட்டதா என்பதை பாரதிய ஜனதா கட்சி நாளை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச் ராஜா, வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் தொலைப்பேசியில் இன்று ஆலோசனை நடத்தினார். பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று அறிவித்ததற்கு பாஜக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. இந்த சூழலில் நாளை பாஜக அதிமுக கூட்டணி முறிந்துவிட்டதா என்பதை அறிவிக்கும் என்று சொல்கிறார்கள்.