திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். அதிமுக பாஜ கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேச அமித்ஷா தமிழகத்திற்கு வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். நான் முருகனுக்கு விழா நடத்தும் போது விமர்சனம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ், பாஜ ஒவ்வொரு பகுதிகளிலும் கடவுளை வைத்து அரசியல் செய்கிறார்கள். கேரளாவில் ஐயப்பனை தொட்டார்கள், ராமரை தொட்டார்கள். ராமர் கோவில் கட்டி விட்ட பிறகு அது முடிந்து விட்டது. ஒடிசாவில் பூரி ஜெகன்நாதரை தொட்டார்கள்.
தற்பொழுது தமிழ்நாட்டில் வந்து முருகனை தொட்டுப் பார்க்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழர்களின் கடவுளாக இருக்கக்கூடிய முருகன், இதற்கு முன்பு அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இவ்வளவு காலம் பாஜ எதுவும் செய்யவில்லை. நாங்கள் முருகனை தூக்கி சென்றவுடன் முருகனையும் நாம் பேசலாம் என பாஜ பேசுகிறார்கள். நான் என் இறையை போற்றுகிறேன். நீங்களும் அதைப்போற்றினால் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் வழிபட்ட கடவுள்களை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.