காங்கயம்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றிய பாஜ பொதுச்செயலாளர் இன்று வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). காங்கயம் தெற்கு ஒன்றிய பாஜ பொதுச்செயலாளர். இவர், ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பைனான்சில் இதே பகுதியில் உள்ள சகாயபுரத்தை சேர்ந்த பட்டியலின வாலிபர் சங்கர் (20) தனது டூவீலர் ஆர்.சி.புத்தகத்தை அடமானம் வைத்து கடன் பெற்றார்.
கடந்த 4 மாதம் தவணை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து சங்கரை நேற்று தனது அலுவலகத்திற்கு வருமாறு சதீஷ்குமார் அழைத்தார். அதன்பேரில் அலுவலகம் வந்தார். அப்போது தவணை செலுத்தாதது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், அலுவலகத்தின் ஷட்டரை மூடி சாதி பெயரை கூறி சங்கரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அவர் படுகாயம் அடைந்த சங்கர், காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வன்கொடுமை, கொலை மிரட்டல், சாதி பெயரை கூறி திட்டுதல் மற்றும் தாக்குதல் என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.