புதுடெல்லி: பாஜ தேசிய தலைவர் பதவிக்கு 3 பெண்கள் போட்டி பட்டியலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பாஜவின் தற்போதைய தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 2023ம் ஆண்டிலேயே முடிவடைந்தது. இருப்பினும், மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அவரது பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. தேர்தல் முடிவடைந்த நிலையில், கட்சியின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக மூத்த தலைவர்களிடையே தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் புதிய தேசிய தலைவராக பெண் ஒருவரை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு நடந்தால், அது பாஜ வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்கும் நிகழ்வாக அமையும்.
இந்தப் பதவிக்கான போட்டியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர மாநில முன்னாள் பாஜ தலைவர் டி.புரந்தேஸ்வரி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவரும், பாஜ மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் ஆகிய மூன்று தென்மாநில பெண் தலைவர்களின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயர் முன்னிலையில் உள்ளது. மோடி நாடு திரும்பியதும் புதிய தலைவர் பெயர் இறுதி செய்யப்படும் என்று பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.