சென்னை: 55 அடி உயரத்தில் பாஜக கொடிக்கம்பம் அமைப்பது முட்டாள்தனமான முடிவு என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு 50 அடி உயரத்தில் பாஜக கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. இதற்கு அந்த பகுதியிலுள்ள பொதுமக்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. மேலும் பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய போது ஜே.சி.பி யை சேதப்படுத்தியதாக அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் மனுவைக் விசாரித்த நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது காவல்துறை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கின் விசாரணை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சேதப்படுத்தப்பட்ட ஜே.சி.பி வாகன உரிமையாளருக்கு 12,000 ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.
மக்களின் கண்ணுக்கு 55 அடி உயர கொடி தெரியவே தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும் 55 அடி உயர கொடி கம்பம் காக்க குருவி தான் உட்கார பயன்படும் என்று தெரிவித்ததோடு. மாநகராட்சிக்கு சொந்தமான சம்பந்தப்பட்ட இடத்தில் மீண்டும் கொடிக்கம்பம் அமைக்க மாட்டோம் என பிரமான பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.