சென்னை: பாஜவுக்கு சென்று வந்த மாஜி எம்எல்ஏவுக்கு மீண்டும் பதவி வழங்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையிலான ேமாதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாற்றம், நீக்கம் தொடர்பாக அறிவிப்பையும் அவர் வெளியிட்டு வந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராமதாசால் நீக்கப்படுவர்கள் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்து வந்தார். இதனால், பாமகவில் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென மாற்றம், நீக்கம் தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் ராமதாஸ் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் இன்று முதல் மீண்டும் அதிரடியில் ராமதாஸ் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக ராமதாஸ் திருவள்ளூர், கடலூர் மாவட்ட பாமக நிர்வாகிகளை மாற்றியுள்ளார்.
அதில் மாநில துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் என்பவரை நியமித்துள்ளார். இவர் பாமகவிலிருந்து பாஜவுக்கு சென்றுவிட்டு மீண்டும் பாமகவுக்கு தாவியவர். அதே போல் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே பாமகவின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கிவிட்டு மன்சூர் உசேனை ராமதாஸ் நியமித்திருந்தார். ஆனால் திலகபாமாவே அந்த பதவியில் தொடர்வார் என அன்புமணி கூறியிருநதார். இந்நிலையில் இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள நிர்வாகிகள் நியமன கடிதத்தில் பொருளாளர் மன்சூர் உசேன் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அததேபோல் அன்புமணியை செயல் தலைவர் என்றே குறிப்பிட்டுள்ளார்.