கோவை: பாஜ செயலாளரை கொல்வதற்காக அரிவாளால் வெட்டிய இந்து முன்னணி பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (28). தனியார் நிறுவன ஊழியர். ஆர்.எஸ்.புரம் மண்டல பாஜ செயலாளராகவும் உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்தபோது சிலர் அங்கு வந்து வாக்குவாதம் செய்தனர்.
பின்னர், அவர்கள் பட்டா கத்தி மற்றும் அரிவாளால் சதீஷை வெட்டினர். கழுத்தை வெட்ட முயன்றபோது கையால் சதீஷ் தடுத்துள்ளார். இதில் அவரின் கை மணிக்கட்டு பகுதி துண்டானது. அவர்கள் சென்றபின் அக்கம்பக்கத்தினர் சதீஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜவினர் நேற்று பூ மார்க்கெட் பகுதியில் குவிந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இந்நிலையில் ஆர்.எஸ்.புரம் போலீசார் உடனடியாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது முன்பகையால் சதீஷ் வெட்டப்பட்டது தெரியவந்தது.
கடந்த ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பூ வியாபாரியும், இந்து முன்னணி முன்னாள் நிர்வாகியுமான வேலுச்சாமியின் (58) மகன் பிரபு(28)வுக்கும், சதீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபுவை சதீஷ் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அவரை பழிவாங்க தந்தை வேலுச்சாமி மற்றும் கூட்டாளிகளுடன் சென்று சதீஷை கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வேலுச்சாமி, சரவணன் (33), கோகுல் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பிரபு, சந்தோஷ் (24) உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.