லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் யோகி ராஜினாமா அல்லது பதவி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 33 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்வாரா? அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.
மக்களவை தேர்தலின் போது கூட, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியின் போது, ‘தேர்தல் முடிந்தவுடன் உத்தரபிரதேச முதல்வர் யோகியை பதவியில் இருந்து நீக்குவார்கள்’ என்று கூறினார். இந்நிலையில் ‘ஆஜ் தக்’ மற்றும் ‘சி-வோட்டர்’ நடத்திய சர்வேயில், உத்தரபிரதேச மக்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவியில் இருந்து நீக்க பாஜக தயாராகி வருகிறதா? என்ற கேள்விக்கு, அதிகபட்சமாக 42 சதவீதம் பேர் ஆம் என்றும், 28.6 சதவீதம் பேர் தற்போது அதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும், 20 சதவீதம் பேர் இல்லை என்றும் பதிலளித்தனர். அதாவது, யோகி ஆதித்யநாத்தை பதவியில் இருந்து நீக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக பெரும்பாலான மக்கள் கூறியுள்ளனர்.இந்த சர்வேயில், உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படக் காரணம் என்ன? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பெரும்பாலான மக்கள் (49.3 சதவீதம்) வேலையின்மை மற்றும் பணவீக்கம் என்றும், 22 சதவீதம் பேர் அரசியலமைப்பை மாற்றுவதாக பாஜக கூறியது என்றும், 10 சதவீதம் ேபர் மாநிலத்தில் கட்சி தலைவர்களுக்குள் கோஷ்டி பூசல் என்றும், 4.9 சதவீத பேர் மாநில அரசின் மீதான அதிருப்தி என்றும் தெரிவித்தனர். மேலும் ராமர் கோயில் அமைந்திருக்கும் அயோத்திக்கு உட்பட்ட பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக ஏன் தோல்வியடைந்தது? என்பது குறித்து கேட்டதற்கு, 28 சதவீதம் பேர் ஓபிசி மற்றும் தலித்துகள் மத்தியில் உள்ள அதிருப்தியே காரணம் என்று கூறியுள்ளனர்.
இது தவிர, 24 சதவீதம் பேர் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷின் பிரசாரம் என்றும், 25 சதவீதம் பேர் உள்ளூர் அளவில் பாஜக மீது அதிருப்தி இருப்பதாகவும், 13 சதவீதம் பேர் மாநில அரசின் மீதான வெறுப்பே காரணம் என்றும் கூறியுள்ளனர். மற்றொரு கேள்வியில், உத்தரபிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு யார் காரணம்? என்று கேட்கப்பட்டதற்கு, 28 சதவீதம் பேர் மாநில தலைவர்களையும், 21 சதவீதம் பேர் மத்திய தலைமையையும், 18 சதவீத பேர் பாஜக கட்சி அமைப்புமே காரணம் என்று கூறினர்.