சென்னை: சென்னை விமான நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தவெக தலைவர் விஜய், தமிழகத்தில் மாற்று சக்தியாக வரவேண்டும் என்று நினைத்து, பாஜ, திமுகவுடன் கூட்டணி இல்லை என கூறியுள்ளார் என்று நம்புகிறேன். ஆனால் அவர் அதிமுகவை பற்றி வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. அவரின் கொள்கை எதிரி பட்டியலில், அதிமுக இருக்கிறதா, இல்லையா என்று அவர் உரையில் புரிந்துகொள்ள முடியவில்லை. திமுக ஆளும் கட்சி என்பதால், அதை எதிர்ப்பது இயல்பான ஒன்று. ஆளுங்கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்ய முடியும் என்பது, வாடிக்கையான ஒன்றுதான். தவெக தலைவர் விஜய் சொல்லி இருப்பதும், இயல்பான ஒன்றுதான்.
கொள்கை எதிரி, அரசியலில் எதிராக, திமுக, பாஜவை தான், விஜய் வெளிப்படையாக கூறினார். அதிமுகவை அவர் விமர்சித்தாரே தவிர, கொள்கை எதிரிகள் பட்டியலில், அதிமுக இருக்கிறது என்று அவர் சொல்லவில்லை. அவர் தமிழகத்தில் மாற்று சக்தியாக வரவேண்டும் என்று எண்ணி, இந்த கருத்தை சொல்லி உள்ளார்.பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் போராட்டம் பாதிக்கப்படும் மக்களுக்கு, நீதி பெற்று தருமானால், குடியிருப்புகளை அகற்றவிடாமல் தடுக்குமானால், அது வரவேற்கத்தக்கது.