திருப்பூர்: கோவை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம், திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி: திருச்சியில் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இது மதிமுகவை விமர்சிப்பவர்களுக்கு மதிமுகவின் வலிமையை காட்டக்கூடிய வகையில் இருக்கும். இந்த மாநாட்டில் மதிமுக கொள்கை பிரகடனம் செய்யப்படும்.
நாங்கள் திராவிட கொள்கை உடையவர்கள். திமுக அரசை விமர்சித்ததில்லை. கூட்டணி தர்மத்தோடு செயல்படுகிறோம். எங்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் திமுகவிடம் எத்தனை இடங்கள் பெற வேண்டும் என எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இதுவரை திமுக கூட்டணியில் இத்தனை இடங்கள் பெற வேண்டுமென கோரிக்கை வைக்கவில்லை.
தேர்தல் உடன்பாடின்போது அதனை பேசிக்கொள்வோம். இது திராவிட மண். இங்கு பாஜ உள்ளிட்ட இந்துதுவா கட்சிகள் காலூன்ற முடியாது. அவர்களால் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. திருப்புவனம் வாலிபர் லாக்கப் மரணத்தில் தமிழ்நாடு முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். காவலர்கள் அதனை திசை திருப்ப பொய் கதைகளை கூறுவது அநீதியிலும் அநீதி. கட்சியை விட்டு வெளியேறியவர்கள் குறித்து விமர்சனம் செய்யப்போவதில்லை. இவ்வாறு வைகோ கூறினார்.